ஒரு கிராமத்தில் சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் செதுக்கிய சிற்பங்களைப் பார்த்து கிராமமே அவரை பாராட்டியது. ஒவ்வொரு சிற்பமும் என்ன ஒரு அழகு! என புகழாதவர்கள் இல்லை எனலாம். இந்த புகழ் மயக்கத்தில், சிற்பி பெருமையுடன் வாழ்ந்து வந்தார்.
காலங்கள் சென்றன. ஒரு நாள் சிற்பி தான் இறக்க போகும் காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு இறப்பதில் விருப்பம் இல்லை. எமன் வரும் பொழுது, அவரை ஏமாற்றி விடலாம். அதற்கு என்ன செய்ய ? என சிற்பி யோசித்தார்.
ஒரு யோசனை தோன்றியது. இந்த யோசனையின் படி, தன்னை போலவே இருக்கும் 15 சிற்பங்களை சிற்பி செதுக்கினார். ஒரு நாள் எமன் தன் வீட்டிற்கு வருவதை உணர்ந்த சிற்பி, அந்த சிற்பங்களுக்கு இடையில் தானும் ஒரு சிற்பம் போல சென்று நின்று கொண்டார்.
எமன், 16 சிற்பிகள் உள்ளது போல உள்ளது. இதில் உண்மையான சிற்பியை எப்படி கண்டு பிடிக்க? என குழம்பினார். சிற்பத்தை சிற்பி என உயிரை எடுக்க முயன்றால்… இயற்கை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக மாறி விடும். அல்லது சிலைகளை உடைத்து பார்த்தால், கலையை அவமதிப்பு செய்ததாகி விடும். என்ன செய்வது? என எமன் மிகவும் குழம்பி போனார்.
எமனுக்கு இறுதியில் ஒரு யோசனை தோன்றியது. மனிதனுக்கே உண்டான, தீய குணமான ஈகோ வை வைத்து சோதித்து விடலாம் என முடிவு செய்து, ‘ஆகா! இந்த சிலை எவ்வளவு அழகாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு சிறு குறை உள்ளதே! இந்த சிலையை செதுக்கிய சிற்பி மட்டும் இங்கு இருந்தால், அந்த குறை என்ன என கூறி விடலாம்’ என சொல்லி முடித்தார்.
இதனை கேட்ட சிற்பியால் மனம் தாங்க முடியவில்லை. இவ்வளவு காலமாக, ஒவ்வொரு சிலையையும் ஒரு சிறு குறை கூட இல்லாமல் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளேன். இந்த எமன் ஒரு நொடி பொழுதில் இப்படி சொல்லி விட்டாரே! என்ற ஆத்திரத்தில், எங்கு குறை உள்ளது? காட்டுங்கள் பார்க்கலாம் என எமனை நோக்கி சிற்பி வேகமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு எமன், ‘நீ ஈகோவுடன் இருப்பது தான் குறை!’ என கூறி கொண்டே பாச கயிறை சிற்பியின் கழுத்தில் போட்டு இழுத்தார்.
ஈகோவினால் தீமையும் துன்பமும் மட்டும் தான் மிஞ்சும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.